Guru Purnima 2024: Invoke the Sapta Rishi & 4 Nalvars for Wisdom, Bad-Karma Dissolution, Material Success & Spiritual Upliftment. Order Now
AstroVed Menu
AstroVed
search

சிவபுராணம் பாடல் வரிகள் | Sivapuranam lyrics in tamil

December 14, 2020 | Total Views : 9,270
Zoom In Zoom Out Print

மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம்:

சைவ, வைணவ பக்தி இலக்கியங்கள் தமிழ் மொழிக்கு கிடைத்த அருட்கொடைகளாகும்.  சைவத்தில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூன்று சிவனாடியார்கள் சிவன் கோயில்களில் பாடிய பதிகங்களில் மறைந்தவை போகக் கிடைத்தவை 8,000 பதிகப் பாடல்களாகும். இதன் தொடர்ச்சியாக அந்தக் காலகட்டத்தில் மாணிக்கவாசகர் தோன்றிப் பதிகம் பாடினார்.

சிவபக்தர்கள் பலர் வீடுகளில் வைத்து வணங்கப்படும் நூல் திருவாசகம். ‘திருவாசகத்த்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்று கூறுவார்கள். அந்த மாபெரும் பொக்கிஷத்தை நமக்கெல்லாம் தந்து அருளியவர் சைவ சமயக் குரவர்கள், நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் ஆவார். மாணிக்கவாசகரால் எழுதப்பட்ட பெரும் நூல்களுள் முதலாவது திருவாசகம், மற்றொன்று திருக்கோவையார் என்பதாகும். சிவபெருமானைப் பற்றியே பக்திப் பாடல்களின் தொகுப்பே இந்த இரண்டு நூல்கள். ஜோதிடம், வாஸ்து, பஞ்சாங்கம், முகூர்த்தம், பரிகாரம், திருமணம், எண் கணிதம், மற்றும் பல தகவல்களை பெற எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

எங்களின் சிவபெருமான் ஹோமத்தில் பங்குகொண்டு பயன்பெறுங்கள் 

மாணிக்கவாசகர்:

மதுரை மாநகரத்திலிருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் தொலைவில் வாதபூரீசுவரர் என்னும் திருநாமத்தோடு இறைவன் அருளும் தலம் திருவாதவூர். அன்றைய கால கட்டத்தில் தென்னாட்டில் புத்தம் மேலோங்கி, சைவ சமய வளர்ச்சி குன்றியிருந்தது. இறைவனின் திருவருளால் சைவம் தழைக்கவும், வேத சிவாகமநெறிகள் விளங்கவும் மாணிக்கவாசகர் அந்த ஊரில் அவதரித்தார். தாய் தந்தையர் மனம் மகிழ்ந்து அவருக்கு திருவாதவூரார் என்று பெயரிட்டனர்.

சிவபுராணம்:

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம்  என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதியே சிவபுராணம் ஆகும். சிறப்புகள் பெற்ற திருவாசகத்தின் முதற் பகுதியாக சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ளது. சிவபுராணமானது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விவரித்து போற்றுகிறது. அதோடு உயிர்கள் அனைத்தும் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்த தத்துவ நோக்கில் எடுத்துக் கூறுகின்றது. எளிய தமிழில் இயற்றப்பட்டிருக்கும் இப்பாடலின் பெரும்பாலான பகுதிகள் பல நூறு ஆண்டுகளைக் கடந்தும் தற்காலத்திலும் இலகுவாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அமைந்துள்ளது சிறப்பு.

சிவபெருமானே எழுதிய திருவாசகம்:

ஒரு ஆனி மாதத்தில், ஆயில்யம் நட்சத்திர நாளில் தில்லையில் சிவபெருமான் அந்தணர்  தோற்றமெடுத்து திருநீறு பூசிக் கொண்டு மாணிக்கவாசகர் தங்கயிருந்த மடத்திற்கு வந்தார். மாணிக்கவாசகரிடம் “தாங்கள் எழுதிய திருவாசகத்தை நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன்” என்றார்.

மாணிக்கவாசகரும் அதை ஏற்றுக் கொண்டு அமர்ந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்லச் சொல்ல சிவபெருமான் எழுதிக் கொண்டார். எழுதிய திருவாசகம் அடங்கிய அனைத்து ஓலைச்சுவடிகளையும் சிவபெருமான் நடராசர் சன்னதி முன்பாக வைத்துவிட்டு மறைந்துவிட்டார்.

மறுநாள் ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படுகிற தீட்சிதர்கள் கூத்தபெருமான் சன்னதியில் நிறைய ஓலைச்சுவடிகளைக் கண்டு திகைத்துப் போயினர்.  ஓலைச்சுவடிகள் அனைத்தையும் எடுத்து பார்த்த அந்தணர்கள் கடைசி ஓலையில், “மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பமுடையான் எழுதியது” என கையொப்பம் இடப்பட்டிருந்ததை கண்டனர். சிவபெருமானின் கருணையை வியந்த அந்தணர்கள் மாணிக்கவாசகர் தங்கியிருந்த இடத்திற்கு சென்று நடந்தவற்றைக் கூறி அழைத்து வந்தார்கள்.

மாணிக்கவாசகரும் ஓலைச்சுவடிகளில் உள்ள ஒவ்வொரு திருவாசகப் பாடலையும் பார்த்து, கடைசியில் சிவபெருமானது கையொப்பத்தை கண்டு பிரமித்தவராய், “ஆம் அடியேன் சொல்ல எழுதப்பட்டதுதான்” என்று சொல்லி வந்தது சிவபெருமான் தான் என எண்ணி உள்ளம் உருகி கண்ணீர் சொரிந்தார். 
உடனிருந்த தீட்சிதர்கள் மாணிக்கவாசகரிடம் ஓலைச்சுவடிகளில் உள்ள திருவாசகத்திற்கு பொருள் கூறுமாறு வேண்டினர். மாணிக்கவாசகரும் புன்முறுவலோடு நடனக் கோலத்தில் இருக்கும் நடராசப் பெருமானைக் காட்டி “இப்பாடல்கள் அனைத்துக்கும் இவர் தான் பொருள்” என்றார். அவ்வாறு மாணிக்கவாசகர் கூறியதும் சிவபெருமான் அருளே ஒரு ஒளி தோன்றியது. அதை நோக்கிய வண்ணம்  உள்ளே சென்ற மாணிக்கவாசகர் சிவபெருமானுடன் இரண்டறக் கலந்துவிட்டார்.

சிவபுராணத்தின் நோக்கம்:

வாழ்க்கையில் முன்செய்த பாவ புண்ணியங்கள் அனைத்தும் தீர்வதற்காக உள்ளம் மகிழக் கூடிய வகையில் சிவபுராணத்தைக் கூறுகிறேன் என பொருள்பட, தான் சிவபுராணம் பாடியதன் காரணத்தை  அதன் 19 ஆம், 20 ஆம் அடிகளில் விளக்கமாக கூறியுள்ளார் மாணிக்கவாசகர். சைவ சித்தாந்த கொள்கைகளின்படி உயிர்கள் செய்யும் நன்மை, தீமை ஆகிய இரு வினைகளும் அவை மீண்டும் மீண்டும் பிறப்பதற்கு காரணமாக அமைவதுடன், உயிர்கள் இறைவனை சென்று அடைவதற்கும் அவை தடையாக உள்ளன. இதன் காரணமாகவே முந்தைய வினைகள் யாவும் ஓய இறைவன் அருள் தேவை எனக்கூறுகிறது சிவபுராணம். சிவபுராணத்தின் இறுதி அடிகளும், அல்லல் நிறைந்த பிறவியை நீக்கும் வல்லமை பெற்ற திருவடிகளைப் பணிந்து சொல்லப்பட்ட இப்பாடலை பொருள் உணர்ந்து சொல்லுபவர்கள் சிவபெருமானின் திருவடிகளை அடைவார்கள்  என வலியுறுத்துகின்றன.

சிவபுராணம் பாடல் வரிகள்:

தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே – எல்லை
மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்..
திருச்சிற்றம்பலம்
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க - 5

வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க - 10

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி - 15

ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். - 20

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய்,
எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் - 25

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் - 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே - 35

வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே - 40

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே - 45

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை - 50

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, - 55

விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் - 60

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரானே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் - 65

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே - 70

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் - 75

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் - 80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று - 85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே - 90

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. – 95

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

banner

Leave a Reply

Submit Comment